இன்று நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் - டெல்லியில் பரபரப்பு!
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லி அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை திரும்ப மாட்டோம் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், பத்திரிகை, ஊடகவியலாளர்கள், திரைக் கலைஞர்கள், வழக்கறிஞர்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் விவசாயிகளின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்புகள் தெரிவித்திருக்கிறது. அதனால், இன்று பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்ட அறிவிப்பு காரணமாக, பஞ்சாப், அரியானா, உ.பி., மேற்கு வங்கத்தில் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.