இந்தியா- ஐரோப்பா ஒப்பந்தம்: எந்தெந்த பொருட்களின் விலை குறையும் தெரியுமா?
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே 2007 ஆம் ஆண்டு முதல் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA - Free Trade Agreement) குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்த இந்த ஒப்பந்தம், நேற்று டெல்லியில் கையெழுத்தாகியுள்ளது.
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
Today is a day that will be remembered forever, marked indelibly in our shared history.
— Narendra Modi (@narendramodi) January 27, 2026
European Council President António Costa and European Commission President Ursula von der Leyen and I are delighted to announce the conclusion of the historic India-EU Free Trade Agreement.… pic.twitter.com/yaSlPm2b2L
இந்திய பிரதமர் மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை ஒப்பந்தங்களின் தாய் என வர்ணித்துள்ளனர்.
எந்த பொருட்களின் விலை குறையும்?
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரி 110%-லிருந்து 40% ஆகக் குறைக்கப்படும். இதன் மூலம் மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற ஆடம்பர கார்களின் விலை குறையும்.

ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் மற்றும் பிற தாவர எண்ணெய்களுக்கான வரி தற்போதைய 45 சதவீதத்திலிருந்து முற்றிலும் நீக்கப்படும்.
மது மற்றும் மதுபானங்களுக்கான வரி 150 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் குறையும். 40 சதவீதமாக உள்ள பழச்சாறுகள் மற்றும் மது அல்லாத பீர்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்படும்.
11 சதவீதமாக உள்ள மருந்துகளுக்கான வரி நீக்கப்பட உள்ளது. இரும்பு, எஃகு மற்றும் இரசாயனங்களுக்கான வரி 22 சதவீதத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட உள்ளது.

44 சதவீதமாக உள்ள இயந்திரங்கள் மற்றும் மின் உபகரணங்களுக்கான வரி முற்றிலுமாக நீக்கப்பட உள்ளது.
55 சதவீதமாக உள்ள ரொட்டிகள், பேஸ்ட்ரிகள், பிஸ்கட்கள், பாஸ்தா, சாக்லேட், செல்லப்பிராணி உணவு உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான வரி முற்றிலுமாக நீக்கப்பட உள்ளது.
முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றுக்கான வரி 22.5 சதவீதமாக உள்ள நிலையில், 20 சதவீத பொருட்களுக்கான வரி முற்றிலுமாக நீக்கப்பட உள்ளது. 36 சதவீத பொருட்களுக்கு வரி குறைக்கப்பட உள்ளது.

இந்த ஒப்பந்தம், 2027 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
2024–25 ஆம் ஆண்டில் இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே 136.53 பில்லியன் டொலர் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 17% பங்களிப்பையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதியில் இந்தியா சுமார் 9% பங்கும் வகிக்கிறது.