ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சாதனைப் படைத்த இந்தியா...!
இந்தியா தலைமையிலான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகஉறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சுழற்சி முறையில் இந்தியா தலைமை ஏற்றது. அதிலிருந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாடுகள் இதுவரை இல்லாத வகையில் பல முன்மாதிரிகளை கொண்டதாக அமைந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் கடல்சார் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு இந்திய பிரதமர் ஒருவர் தலைமை ஏற்றது இதுவே முதன் முறையாகும். அது மட்டுமின்றி, ஆசிய - பிசிபிக் கடல் பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழலில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் முதன் முறையாக விவாதித்ததும் கூடுதல் சிறப்பாக அமைந்தது.
அதேபோல் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமைதிப் படை குறித்தும், பயங்கரவாத தடுப்பு பற்றியும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இரு கூட்டங்களில் உரையாற்றினார். அப்போது அமைதிப் படையினர் செய்யும் குற்றங்களுக்கு அவர்களை பொறுப்பாக்கும் முக்கிய வரைவு தீர்மானத்தை, இந்தியா தாக்கல் செய்தது.
இதுவரை நடந்திராத வகையில் 80 உறுப்பு நாடுகள் வழிமொழிந்த இந்த தீர்மானத்திற்கு, கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனிடையே செப்டம்பர் முதல் நாளான நேற்று முதல் ஐரோப்பிய நாடான, அயர்லாந்து, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை ஏற்றுள்ளது.