கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமல்ல - ராதாகிருஷ்னன்
கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அவசர அனுமதி வழங்கியுள்ள நிலையில் விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. தமிழகத்துக்கு முதல்கட்டமாக 5.56 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இன்று காலை வரவுள்ளன.
சீரம் நிறுவனத்திடம் இருந்து 5,36,500 தடுப்பூசிகள் வருகின்றன. பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் இருந்து 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வருகின்றன. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”முதல் கட்டமாக புணேவிலிருந்து தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இன்று காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடையும் தடுப்பூசி மருந்துகள் 10 நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. கொரோனா தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் போடப்படும்.
தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும். 30 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை போடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.