நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்த காரணம் இதுவா? - விராட் கோலி சொன்ன தகவல்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளதால் கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி டிராவில் முடிய இரண்டாவது போட்டி கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 325 ரன்களும், நியூசிலாந்து 62 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. 263 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.
இதனால் 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து வெறும் 167 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி இந்திய அணியிடம் 372 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்தநிலையில் நியூசிலாந்து அணியுடனான வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் மிக சிறப்பாக விளையாடினோம். முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மிக சிறப்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தியது, ஆனால் நியூசிலாந்து அணி வீரர்கள் தங்களது கடுமையான போராட்டத்தின் மூலம் போட்டியை டிரா செய்துவிட்டார்கள்.
இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம். மேலும் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே எங்களது இலக்கு. எதிர்வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, அதனால் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என விராட் கோலி கூறியுள்ளார்.