இந்திய எல்லையில் சீன தயாரிப்பான துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் கண்டுபிடிப்பு

police army navy
By Jon Feb 26, 2021 02:12 PM GMT
Report

இந்திய எல்லையில் பதுங்கு குழியிலிருந்து சீன தயாரிப்பான துப்பாக்கிகளும், கையெறி குண்டுகள் இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, எல்லையில் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் கத்துவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையோர கிராமங்கள் மற்றும் நிலைகளை குறி வைத்த பாகிஸ்தான் ராணுவத்தினர், தாக்குதல் நடத்தினார்கள்.

சனிக்கிழமை இரவு சுமார் பத்தரை மணி அளவில் இந்த அத்துமீறல் நடந்தது. ஹிராநகர் செக்டாரில் போபியா பகுதியில் நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு இந்திய எல்லைக்காவல் படையினர் பதிலடி தாக்குதல் தொடுத்தார்கள். பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையோரம் வசிப்பவர்கள், இரவு நேரத்தில் பதுங்கு குழிகளில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் இருப்பதான ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார், ராணுவ வீரர்களுடன் சென்று, இரு தினங்களுக்கு முன்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். காஷ்மீர் போலீசாரும், இந்திய ராணுவமும் இணைந்து மேற்கொண்ட இந்த கூட்டு நடவடிக்கையில், அங்கிருந்த பதுங்கு குழிகளிலிருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கிகளும், சீன தயாரிப்பு துப்பாக்கிகளும், 4 கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

பின்னர், அங்கிருந்த இரண்டு பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டது. இதனையடுத்து காஷ்மீரின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.