பஞ்சாங்கத்தை கணித்து கூறி கோவையைச் சேர்ந்த 3ம் வகுப்பு மாணவன் சாதனை
பஞ்சாங்கத்தில் திதி நட்சத்திரங்களை கூறி, ஒவ்வொரு நாளுக்கான பஞ்சாங்கத்தை கணித்து கூறி கோவை சிறுவன் சாதனைப் படைத்துள்ளான்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி நீலம். இவர்களுக்கு திரிசூல வேந்தன் (7) என்ற மகன் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்றைய காலத்தில் ஆங்கில நாட்காட்டிகளைத் தெரிந்து கொள்வதிலேயே குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். ஆனால், திரிசூல வேந்தன் பஞ்சாங்கத்தை முழுமையாக படித்து, அதில் வரும் யுகங்கள், மாதங்கள், நாள், திதி, நல்ல நேரம் ஆகியவற்றை முழுமையாக தெரிந்து வைத்து அசத்தியிருக்கிறார்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை பவுர்ணமி நாட்கள் எப்போது வரும், தீபாவளி பண்டிகை உட்பட அனைத்து பண்டிகைகளும் பஞ்சாங்க நாட்காட்டியின்படி எப்போது வரும் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் திரிசூல வேந்தனின் விரல் நுனியில் இருக்கிறது.
இது தவிர, ஒருவரது பிறந்த நாளை வைத்து அவர் எந்த நட்சத்திரம், ராசியில் பிறந்தவர் என்பதை கணினி மற்றும் இணையதளத்தின் உதவி இல்லாமல் சில நிமிடங்களில் கணித்து சொல்லி விடுகிறார் திரிசூல வேந்தன்.
இது குறித்து அச்சிறுவனின் தாய் நீலம் கூறியதாவது -
வீட்டில் இருக்கும் காலண்டரை என் மகன் அடிக்கடி எடுத்து பார்ப்பார். தினசரி நாட்காட்டிகளில் உள்ள பஞ்சாங்க குறிப்புகள் குறித்து ஆர்வத்துடன் எங்களிடம் கேட்பார். என் மகனுக்கு பஞ்சாங்கத்தில் இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்டோம்.
இதனையடுத்து, எங்கள் குடியிருப்பின் அருகில் உள்ள கோவில் பூசாரி சந்திரமவுளி என்பவரிடம் வாரந்தோறும் 2 நாட்கள் சென்று பஞ்சாங்க குறிப்புகளை கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தோம். கொரேனா காலத்தை பயன்படுத்திக் கொண்ட என் மகன் ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திதி, நேரங்களை எங்களிடம் கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இதனையடுத்து, இந்த விவரங்களை இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் அமைப்புக்கு அனுப்பினோம். தற்போது என் மகன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து விட்டார். அடுத்த ஆண்டு வெளியாகும் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் திரிசூல வேந்தன் குறித்த குறிப்புகள் இடம்பெற உள்ளது.
இவ்வாறு நீலம் கூறினார்.