ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸ்- அறிவிப்பை வெளியிட்ட மாநில முதல்வர் யார் தெரியுமா?
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், பீகாரிலும் இரவு நேர ஊரடங்கை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, பீகார் மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரி, தியேட்டர்கள், மால்கள், ஜிம்கள், கோவில்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இறுதி சடங்கு மற்றும் திருமண விழாக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளான காய்கறி, பழங்கள் உள்ளிட்ட கடைகள் மட்டும் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பீகாரில் சிறப்பம்சம் என்னவென்றால், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தது தான். சுகாதாரத்துறை ஊழியர்களின் சேவையை பாராட்டும் விதமாக ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது மக்களுக்காக உழைக்கும் சுகாதாரத்துறையினருக்காக அரசு இந்த அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போதும் பீகாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.