கருப்பு பூஞ்சை நோய்க்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!
இந்தியாவில் கொரோனா 2 வது அலை அசுர வேகத்தில் பரவிக்கொண்டு வருகிறது. அதேவேளையில், கொரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை என அடுத்தடுத்து நோய்கள் உருவாகி மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.
குறிப்பாக, கொரோனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் அச்சப்படும் நோய்த்தொற்று கருப்பு பூஞ்சை தான். கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களையும் அதிகளவு பாதிக்கும் இந்த கருப்பு பூஞ்சை நோய், மரணமடையச் செய்யும் அளவுக்கும் அபாயகரமானதாக உள்ளது.
இந்த தொற்று பாதிப்புள்ளவர்களுக்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு பல மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது -
கருப்பு பூஞ்சை தொற்றால் ஏராளமான இந்திய மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இத்தொற்றுக்கான சிகிச்சைகள் இலவசமாக அளிக்க வேண்டும். ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.