ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை
கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளத்தின் பெரும்பாவூர் ஒக்கல் பகுதியை சேர்ந்தவர் பிஜூ (46) இவரது மனைவி அம்பிளி (39). இவர்களது மகள் ஆதித்யா (15), மகன் அர்ஜுன் (13) ஆதித்யா 10ம் வகுப்பும், அர்ஜுன் 7ம் வகுப்பும் படித்து வந்தனர். வீட்டில் மாடு வளர்த்து வந்த பிஜூ, சீட்டுக் கம்பெனியும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போன்று நேற்று காலை 7 மணியளவில் பால் வாங்க அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்ததுடன் கதவை பலமுறை தட்டியும் திறக்காமல் இருந்துள்ளனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டு கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தபோது, 4 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து காணப்பட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் சடலங்களை கைப்பற்றியதுடன் விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த ஒரு கடிதத்தில், தங்கள் தற்கொலைக்கு சீட்டு நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது.