இந்தியாவிலும் தோன்றிய மர்ம தூண்.! பின்னணி என்ன?

india-bjp-kerala
By Jon Jan 02, 2021 07:48 AM GMT
Report

கடந்த நவம்பர் 18ம் தேதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் உலகில் முதன் முறையாக மோனோலித் எனப்படும் மர்ம தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், சில நாட்களில் தூண் மர்மமாக மறைந்தது.

இதனையடுத்து, ருமேனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து என பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட தூண்கள் சில நாட்களில் மர்மமான முறையில் மாயமாகி வருகிறது.

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரெனத் தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய இந்த மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் திடீரென தோன்றிய ஒற்றைத்தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டது.

இதுபோன்ற தூண் இந்தியாவில் தென்பட்டது இதுதான் முதல் தடவையாகும். அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் இந்த தூண் காணப்பட்டுள்ளது.

உலோக அமைப்பு தரையில் அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது, ஆனால் அதன் அடிவாரத்தில் தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. அகமதாபாத்தின் மர்ம உலோகத் தூண் அமைப்பு ஒரு பேசுபொருளாக மாறியது. பெருமளவில் பூங்காவுக்கு படையெடுத்த மக்கள் அதன் முன் நின்று செல்பிக்களையும் ஆர்வத்துடன் எடுத்துச்சென்றனர்.

குஜராத்தின் அகமதாபாத்தில் பூங்காவில் நிறுவிய உலோகத்தூண் தனியார் நிறுவனம் ஒன்றால் நிறுவப்பட்டது என தெரியவந்ததால், பிற நாட்டில் நிலவியதைப் போல நீண்ட நாட்கள் மர்மம் இங்கு நீடிக்கவில்லை.

அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் பூங்காக்கள் மற்றும் தோட்ட உதவி இயக்குநர் திலிபாய் படேல் கூறுகையில், பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பான தனியார் நிறுவனத்தால் இந்த உலோகத்தூண் நிறுவப்பட்டதாகக் கூறினார்.