நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது கேரள அரசு - பாஜக தாக்கு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்து, அவற்றுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற கேரள அரசு சட்டமன்றத்தை கூட்ட பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஆளுநர் ஆரிப் முகமது கான் அமைச்சரவையின் பரிந்துரையை மறுத்துவிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் 2-வது முறையாக சட்டமன்றத்தை கூட்ட கேரள அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதனை அடுத்த ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சர் முரளிதரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது ''கேரள சட்டப்பேரவையில் இன்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணத்தை எதிரொலிக்கும் விதமாக நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது நாட்டு மக்களின் எண்ணத்திற்கு எதிராக கேரள அரசு செயல்படுவதையே இது காட்டுகிறது.'' எனக் கூறினார்.