இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று மாலை டெல்லியில் தகனம் செய்யப்பட உள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையிலிருந்து நேற்று நண்பகல் ஆம்புலன்ஸ் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு முப்படைத் தளபதிகள் அஞ்சலி செலுத்தினார்கள். ராணுவ தளபதி நரவனே, கடற்படைத் தளபதி ஹரிகுமார் மற்றும் விமானப்படை தளபதி விஆர் சௌத்ரி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோல, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில், பிபின் ராவத்தின் இல்லத்தில் காலை 11 மணி முதல் 12. 30 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னர் மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் அனைத்து கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.