செஞ்சூரியன் மைதானத்தில் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது இந்தியா

record india beat south africa 113 runs difference
By Swetha Subash Dec 30, 2021 11:30 AM GMT
Report

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா முதல் இன்னிங்சில் 327 ரன் குவித்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 123 ரன்களும் மயங்க் அகர்வால் 60 ரன்களும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்னில் சுருண்டது.

அதிகப்பட்சமாக பவுமா 52 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

130 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ரி‌ஷப்பண்ட் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். ரபடா, மார்கோ ஜான்சென் தலா 4 விக்கெட்டும், நிகிடி 2 விக்கெட்டும் எடுத்தனர்.

305 ரன் இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் எல்கர் 52 ரன்னுடன் களத்தில் இருந்தார். பும்ரா 2 விக்கெட்டும், முகமது ‌ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பும்ராவின் நேர்த்தியான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் எல்கர் (77) ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.

அடுத்த வந்த டி காக்(21) சிராஜ் பந்து வீச்சிலும் முல்டர் (1) சமி பந்து வீச்சிலும் வெளியேறினார். உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிகா அணி 182 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து ஆடி வந்தது.

பவுமா 34 ரன்னிலும் ஜன்சன் 5 ரன்னில் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளை முடிந்த சிறிது நேரத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஒரே ஓவரில் அஸ்வின் கடைசி 2 (ரபாடா நிகிடி) விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7-ந் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.