இங்கிலாந்தை ஓட விட்ட இந்திய அணி - 4வது டெஸ்ட்டில் அபார வெற்றி

INDvsENG WTC23 LordShardul umesh
By Petchi Avudaiappan Sep 06, 2021 04:01 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில்191 ரன்களும், இங்கிலாந்து அணி 290 ரன்களும் எடுத்தன.

பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சைதொடங்கிய இந்திய அணி 466 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று 5 வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வாழ்வா? சாவா? என்ற நிலையில் இரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டிய நிலையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது.

அந்த அணியில் அதிகப்பட்சமாக ஹசீப் ஹமீத் 63 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 50 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொதப்பினர். இதனால் 92.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா, தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்க உள்ளது.