300 கோடி மக்களின் பிரதான உணவான அரிசிக்கு தடை - அலறும் உலக நாடுகள்..!
உலகின் 300 கோடி மக்களின் பிரதான உணவான பாசுமதி அரிசி வகை அல்லாத மற்ற அரிசிக்கு இந்தியா ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் இந்தியாவை நம்பியுள்ள உலக நாடுகள் பலவும் அரிசிக்கு அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உலக சந்தையில் இந்தியாவின் அரிசி மலிவு விலை
கோதுமையை போல் உள்நாட்டில் அரிசியின் விலையை கட்டுப்படுத்த இந்திய அரசு தடை விதிக்க கூடும் என்ற எச்சரிக்கை கடந்த ஒரு மாதம் முன்பாகவே விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது இந்திய அரசு.
இதற்கு காரணம் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கனமழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தான்.
இந்தியாவின் இந்த அறிவிப்பால் உலக நாடுகளில் அரிசியின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. உலக சந்தையில் இந்தியாவின் அரிசி மலிவு விலையில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி
உலகின் சுமார் 300 கோடி மக்களின் பிரதான உணவாக அரிசி இருக்கிறது. சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதத்திற்கும் மேல். இந்தியாவில் இருந்து சுமார் 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் பாஸ்மதி அல்லாத அரிசியின் பங்கு மட்டும் 25% என்பது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டில் உலக அரிசி ஏற்றுமதி 5.54 கோடி டன்னாக இருந்த போது இந்தியாவின் பங்கு மட்டும் சுமார் 2.22 கோடி டன்னாக இருந்தது. இதில் பாஸ்மதி அல்லாத அரிசி மட்டும் சுமார் 1.8 கோடி டன்னாக இருந்தது.
இந்தியாவிற்கு அடுத்த படியாக உலகில் அரிசி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், அமெரிக்கா நாடுகளில் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பரிதவிப்பில் உலக நாடுகள்
அமெரிக்காவில் இந்திய அரசு தடைக்கு முன்பு 10 கிலோ அரிசி 20 டாலராக அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,639க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது 10 கிலோ அரிசியின் விலை 30 டாலராக அதாவது இந்தியா ரூபாய் மதிப்பில் 2,459க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரிசி விலை உயர்வால் துருக்கி, சிரியா, பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆப்பிரிக்க நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.