உ.பி விவசாயிகள் படு கொலை விவகாரம் :மத்திய அமைச்சரின் மகன் ஆஜராகாமல் தப்பியோட்டம்
லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சம்மன் அனுப்பியும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகாமல் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த 3ஆம் தேதி அன்று மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது எதிர்பாராத விதமாக விவசாயிகள் கூட்டத்திற்குள் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் புகுந்த விபத்தை ஏற்படுத்தியது. இதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில், ஒரு பத்திரிக்கையாளரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டினையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லக்கிம்பூர் கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கேள்வி எழுப்பியதோடு இந்த சம்பவம்தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து விவசாயிகள் கொல்லப்பட்ட புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், இன்று காலை 10 மணிக்கு ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை. அவர் தப்பியோடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகாததால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உ.பி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.