எங்களுக்கு லண்டனில் செட்டிலாகும் எண்ணம் ஏதும் கிடையாது - விளக்கம் கொடுத்த ரிலையன்ஸ்
அம்பானி குடும்பம் லண்டனில் குடியேறப்போவதாக தகவல் பரவி வருகிறது. இத்தகவலுக்கு ரிலையன்ஸ் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக இருந்த ஸ்டோன் பார்க் பங்களாவை ரூ.592 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். இந்த பங்களாவில் வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அம்பானி குடும்பத்தினர் குடியேற இருக்கிறார்கள்.
இனி இந்தியாவில் அவர்கள் தங்க மாட்டார்கள் என்பன போன்ற தகவல்கள் சில தினங்களாக பரவி வந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக ரிலையன்ஸ் குழுமம் விளக்கம் கொடுத்துள்ளது.
இது குறித்து குழு கொடுத்துள்ள விளக்க அறிக்கையில், தங்கள் ஹோட்டல் தொழிலை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்திலேயே இந்தக் கட்டடத்தை வாங்கி இருப்பதாகவும், அதனை கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மாற்ற இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், அம்பானி குடும்பத்தாருக்கு லண்டனில் செட்டில் ஆகும் எண்ணம் ஏதும் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
