சர்ச்சை விளம்பரத்தால் சிக்கலில் சிக்கிய ‘டாபர் நிறுவனம்’ - நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது
'கர்வா சவுத்' பண்டிகையை ஒட்டி 'டாபர்' நிறுவனம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அந்நிறுவனம் திரும்ப பெற்றது.
அத்துடன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தின் 4 நாளை வட மாநில பெண்கள், 'கர்வா சவுத்' என்ற பெயரில் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.
அந்நாளில் கணவருக்கு மரியாதை செய்து, இருவரும் சேர்ந்து இரவில் நிலவை பார்த்து வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளனர். கணவரின் உடல்நலன் மற்றும் திருமண உறவு வலுப்பெற வேண்டி இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி 'டாபர்' நிறுவன தயாரிப்பான 'பெம் கிரீம்' என்ற சிகப்பழகு கிரீம் விளம்பரம் சமீபத்தில் வெளியானது. அதில் இரண்டு பெண்கள், கணவன் - மனைவியாக சித்தரிக்கப்பட்டிருந்தனர். இது பல்வேறு தரப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விளம்பரம் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. 'விளம்பரத்தை திரும்ப பெறவில்லை எனில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, சர்ச்சைக்குரிய விளம்பரத்தை 'டாபர்' நிறுவனம் திரும்ப பெற்று விட்டது. இதனையடுத்து, நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.
