இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் தமிழகம்...தங்கம் தென்னரசு பெருமிதம்
சென்னை சேப்பாக்கத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்த போது, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழகம் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
இரண்டாவது பெரிய பொருளாதாரம்
சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் தமிழகத்தின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நடப்பு உற்பத்தி மதிப்பு ரூ.23,64,514 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் பொருளாதாரம் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என குறிப்பிட்ட அவர், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதரம் -7.92 % இருந்தது என்றும் அது 2022-23 ஆம் ஆண்டில் 8.19 % வளர்ச்சியடைந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.
வளர்ச்சி பாதையில் தமிழகம்
இரண்டு ஆண்டுகள் எடுக்கப்பட்ட சீரான நடவடிக்கைகளால் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் உள்ளது என கூறிய தங்கம் தென்னரசு, தனிநபர் ஆண்டு வருமானத்திலும் தமிழகம் சிறப்பான நிலையில் உள்ளது என தெரிவித்தார்.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு தனிநபர் வருமான உயர்ந்துள்ளது என கூறிய அவர், தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்திய அளவில் விலைவாசி உயர்ந்தாலும், தமிழகத்தில் அது குறைவாகவே இருக்கிறது என அவர் கூறினார்.