இலங்கைக்கு எதிரான போட்டியில் சாதனைகளை படைத்த இந்திய அணி... என்ன தெரியுமா?
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இப்போட்டியில் 3 சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று இரவு நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக இஷான் கிஷன் 89, ரோகித் சர்மா 44, ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்கள் விளாசினர்.
தொடர்ந்து பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் தொடர்ந்து 10 டி20 போட்டியில் இந்திய அணி வென்று சாதனையை படைத்துள்ளது. அதேபோல் இந்தப் போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை யுஸ்வேந்திர சாஹல் படைத்தார்.