டெல்லியில் பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர்: 25 பேரை கைது செய்த போலீஸ்!

india
By Nandhini May 16, 2021 07:26 AM GMT
Report

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்து டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ஒட்டிய 25 பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து டெல்லியில், பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் போன்ற பல்வேறு கேள்விகள் கேட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் டெல்லியின் கிழக்கே உள்ள கல்யாண்புரியில் 1800 போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, இதன் பின்னணியில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மறுபடியும் டெல்லியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இது குறித்து, பல்வேறு தரப்பிலிருந்து போலீசாருக்கு புகார்கள் வந்துக் கொண்டிருந்தன. இதனால், பல்வேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார், போஸ்டர் ஒட்டியது தொடர்பாக இதுவரை 25 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் ஒட்டுவதற்கு பணம் கொடுத்தது யார்? போஸ்டர் ஒட்டியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

டெல்லியில் பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர்: 25 பேரை கைது செய்த போலீஸ்! | India