பாதுகாப்புமின்றி தனியாகச் சென்ற பிரதமர் மோடி

2 weeks ago

பிரதமர் மோடி ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் பாதுகாப்பினைத் தவிர்த்து விட்டு தனியாகச் செல்வது வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் அந்த இடத்திற்குச் சென்று வந்த பிரதமர் மோடி இன்றும் அதே இடத்திற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் தவிர்த்து விட்டு தனியாகச் சென்று வந்திருக்கிறார். அந்த இடம் டெல்லியில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா.

குருத்வாராவில் சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான ஸ்ரீ குரு தேக் பகதூரை சீக்கியர்கள் வணங்கி வருகிறார்கள். இந்த சீக்கியக் கோயிலான ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு, கடந்த டிசம்பர் மாதத்தில், ஸ்ரீ குரு தேக் பகதூரின் நினைவு தினத்தை முன்னிட்டு வழிபடச் சென்றிருந்தார் பிரதமர் மோடி. அப்போது அவர் வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல், முன்னேற்பாடுகளும் எதுவும் செய்யாமல், சென்று வழிபட்டு வந்துள்ளார்.

அதேபோல், பிரதமர் மோடி இன்று குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப்பில் ஸ்ரீ குரு தேஜ் பகதூர்ஜியின் 400-வது பிறந்த நாளை முன்னிட்டு, அங்கு சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார். குருத்வாரா செல்லும்போது எந்தப் பாதுகாப்பு அதிகாரியையும் பிரதமர் மோடி உடன் அழைத்து செல்லவில்லை. அதேசமயம் செல்லும் வழியில் எந்த போக்குவரத்தையும் நிறுத்திவைத்து மக்களை காத்திருக்கச் செய்யவில்லை. எளிமையாகச் சென்று வணங்கிவிட்டு வந்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘குரு தேக் பகதூர் ஜியின் வாழ்க்கையையும், அவரது லட்சியங்களையும், உயர்ந்த தியாகத்தையும் நாம் ஒருபோதும் மறக்க முடியாது. அவரது தைரியமும், நலிந்தவர்களுக்கு சேவை செய்வதற்காக அவர் எடுத்த முயற்சிகளுக்காக அவர் உலகளவில் பரவலாக போற்றப்படுகிறார். கொடுங்கோன்மைக்கும், அநீதிக்கும் தலைவணங்க அவர் மறுத்துவிட்டார். அவரது உயர்ந்த தியாகம் பலருக்கு பலத்தையும் ஊக்கத்தையும் தருகிறது. அவரது 400-வது பிறந்த தின சிறப்பு நிகழ்வில், நான் ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியை வணங்கினேன்’என்று பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்