முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கொரோனாவால் காலமானார்
இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி கொரோனாவால் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி (91). இவருக்கும், இவரது மனைவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனையடுத்து, இவர்கள் இருவரும் தெற்கு டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று சோலி சொராப்ஜி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார். இவர் இந்தியாவின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது பெற்றவர். கடந்த 1930ம் ஆண்டு மும்பையில் பிறந்த அவர், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1971ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும் இவர் பணியாற்றினார். கடந்த 1989ம் ஆண்டு அவர் அட்டர்னி ஜெனரலானார். பின்பு கடந்த 1998ம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை மீண்டும் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.