கொரோனாவை எதிர்கொள்ள முப்படைகள்: பிரதமர் மோடி- ராணுவத் தளபதி திடீர் சந்திப்பு

india
By Nandhini Apr 26, 2021 12:56 PM GMT
Report

இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான போரில் முப்படைகளைப் பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று ராணுவத் தளபதி பிபின் ராவத்துடன் திடீரென ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனாவின் தொற்று 3 லட்சத்தைக் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த முப்படைகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து பிரதமர் மோடி இன்று ராணுவத் தளபதி பிபின் ராவத்துடன் ஆலோசனை நடத்தினார்.

கொரோனாவை எதிர்கொள்ள முப்படைகள்: பிரதமர் மோடி- ராணுவத் தளபதி திடீர் சந்திப்பு | India

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது -

பிரதமருடனான சந்திப்பின்போது முப்படைகளைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து செயல்படத் தயாராக இருக்கின்றனர் என்று எடுத்துரைக்கப்பட்டது.

அதேபோல், கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்களும் கூட கொரோனா தடுப்பு மருத்துவமனைகளில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். அவரவர் உள்ள இடங்களிலேயே கொரோனாவுக்கு எதிரான போரில் அவர்கள் இணைவார்கள் என்று விளக்கப்பட்டது.

இதுதவிர, ஹெல்ப்லைன் வாயிலாக ஆலோசனை வழங்கும் பணியிலும் ராணுவத்தைச் சேர்ந்த மூத்த முன்னாள் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டது. மேலும், ராணுவத் தரப்பில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களும் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு மடைமாற்றி விடப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

மேலும், இந்த ஆலோசனையின் போது வெளிநாடுகளில் இருந்து வரும் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்களை விமானப்படை கையாள்வது குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.