மே மாதத்தில் கொரோனாவால் மோசமான நிலை வந்தாலும் - எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் - மத்திய அரசு

india
By Nandhini Apr 24, 2021 11:42 AM GMT
Report

மே மாதத்தின் மத்தியில் கொரோனா தாக்கம் அதிகரித்து மோசமான நிலை வந்தாலும், அதனை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியின் பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசு தொகுப்பிலிருந்து இன்னும் முழுமையாக ஆக்ஸிஜன் சப்ளை கிடைக்கவில்லை என டெல்லி அரசு தெரிவித்தது. ஆக்சிஜன் அளவை 480 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குவதாக கூறிய நிலையில், 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் குறைவாகவே கிடைத்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசு உறுதியளித்த வகையில், டெல்லிக்கு தேவையான 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எப்போது, எந்த தேதியில் வந்து சேரும்? வந்து சேரும் குறிப்பிட்ட தேதியை கூறுங்கள் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, ஆக்சிஜன் வழங்குவது தொடர்பாக அனைத்து பணிகளும் மிக விரைவாகவே நடந்து வருகிறது. எனவே, தற்போதைய நிலையை உரிய துறையிடம் கேட்டு தெரிவிக்கிறோம் என்றது.

அதைத் தொடர்ந்து, கொரோனாவின் தாக்கம் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் மே மாத மத்தியில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக டெல்லி ஐஐடி கூறியுள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. அப்படி இருக்கும்போது அதை எப்படி சமாளிக்க போகிறீர்கள் என்று நீதிபதிகள் மத்திய அரசிடம் கேட்டனர்.

மே மாதத்தில் கொரோனாவால் மோசமான நிலை வந்தாலும் - எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் - மத்திய அரசு | India

அதற்கு மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கையில், “நீதிமன்றத்தின் இந்த வார்த்தைகளை கவனத்தில் கொள்வோம், எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கடவுளை வேண்டுகிறோம். ஒருவேளை மே மாதத்தின் மத்தியில் தாக்கம் அதிகரித்து மோசமான நிலைமை வந்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இது யாரையும் அச்சுறுத்துவதற்காக கூறவில்லை என்று தெரிவித்தது.