கிராம சபை கூட்டங்கள் நடத்த தடை - தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது என்று ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்தாண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவுறுத்தல்களை கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவீன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.