சுதந்திர தின விழா ஒத்திகை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்!! எந்தெந்த இடம் தெரியுமா?
நாட்டின் 75வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சிகளுக்காக வருகிற 07, 09 மற்றும் 13 ஆம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு 75வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெற உள்ளது. மேலும் ஆகஸ்ட் 07, 09, 13 ஆம் தேதி சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதனால் ஒத்திகை நடைபெறும் மூன்று நாட்களில் காலை 6.30 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்தில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS ROAD)வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.
பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS ROAD)ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலை வரலாம்.
அண்ணா சாலையிலிருந்து கொடிமர சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், குளு சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.
முத்துசாமி சாலையிலிருந்து கொடிமர சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலைக்கு வரலாம்.
எனவே மேலே குறிப்பிட்டுள்ள சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை
வலியுறுத்தியுள்ளது.