சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு!
இந்தியாவில் 75 ஆவது சுதந்திரத்தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுவதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிர பாதுகாப்பு
இந்தியாவில் அனைவரும் வருகின்ற ஆகஸ்ட் 15-ல் கோலாகலமாக 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜா.காவின் பல முக்கிய தலைவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் உள்ள முகப்பு பக்கத்தில் மூவர்ண கொடியின் சின்னத்தை வைத்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் நடக்கவிருக்கும் 75 ஆவது சுதந்திர நாள் அன்று எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதான இடங்களாக கருதப்படும் ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாடு தளங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மற்றும் அதன் வளாகங்களில் ரோந்து பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமானங்களில் எரிபொருள் நிரப்பும் பகுதிகளில் தற்போது கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
விமானநிலையத்தில் போடப்பட்டுள்ள இந்த 5 அடுக்கு பாதுகாப்பானது வரும் 13,14,15 ஆம் தேதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கும் என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.