டி20 தொடரில் நியூசிலாந்தை ஓட விட்ட இந்தியா - 3 போட்டிகளையும் வென்று அசத்தல்
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டியையும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றிவிட்டது.
இதனிடையே 3வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கி நியூசிலாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இஷான் கிஷன் 29 ரன்களில் அவுட்டாக சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் 25,வெங்கடேஷ் ஐயர் 20, தீபக் சாஹர் 21 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் கேப்டன் சண்ட்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் மார்டின் குப்தில் 51 ரன்கள் குவிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். இதனால் 17.2 ஓவர்களில் அந்த அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணியின் இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.