வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்றது இந்தியா - 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று அதே மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் அதிகப்பட்சமாக சூர்யகுமார் யாதவ்(64 ரன்கள்), கே.எல்.ராகுல் (49 ரன்கள்) எடுக்க மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 237- ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்சாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் ஆகியோர் அதிகப்பட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஷார்மார் புரூக் 44, அஹீல் ஹூசைன் 34, ஹோப் 27, ஸ்மித் 24 ரன்கள் எடுக்க 46 ஓவர்கள் தாக்குப்படித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய பந்து வீச்சாளர்களில் அதிகப்பட்சமாக பிரஷித் கிருஷ்ணா அதிகப்பட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 11 ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.