உலகக்கோப்பை தோல்விக்கு பழிவாங்கிய இந்தியா - நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று 2வது டி20 போட்டி நடைபெற்றது. ராஞ்சியில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதன்படி களம் கண்ட நியூசிலாந்து அணியில் கப்டில் 31, டேரில் மிட்சேல் 31, க்ளென் பிலிப்ஸ் 34 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக போட்டியில் விளையாடிய ஹர்சல் படேல் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இந்திய அணி நியூசிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. தொடக்க வீரர்களான துணைகேப்டன் கே.எல்.ராகுல் 65 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 55 ரன்களும் விளாச 17.2 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பழிவாங்கி விட்டதாக இந்திய அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.