வெஸ்ட் இண்டீசை ஓட விட்ட இந்திய அணி - 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 9 ஆம் தேதி நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இதனையடுத்து 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 80, ரிஷப் பண்ட் 56, வாஷிங்டன் சுந்தர் 33, தீபக் சாஹர் 38 ரன்கள் விளாச 50 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகப்பட்சமாக ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து ஆறுதல் வெற்றியை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியில் ஓடியன் ஸ்மித் 36, நிக்கோலஸ் பூரன் 34, அல்சாரி ஜோசப் 29 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 37.1 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகன் விருதையும், பிரஷித் கிருஷ்ணா தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றி அசத்தினர்.