சாதித்த இந்திய அணி - முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார பெற்று அசத்தியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிக்கோலஸ் பூரன் 61 ரன்கள், மேயர்ஸ் 31 ரன்கள், பொல்லார்டு 24 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகப்பட்சமாக ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 40, இஷான் கிஷன் 35, சூர்யகுமார் யாதவ் 34, வெங்கடேஷ் ஐயர் 24 ரன்கள் விளாசினர். இதனால் 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.