ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோற்க இவரா காரணம்? - கடுப்பான இந்திய ரசிகர்கள்
டி20 உலக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோற்க ஹசன் அலி தான் காரணம் என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அதற்கு இந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்து அசத்தியது.
தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது . அந்த அணியை ஸ்டாய்னிஸ் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் சிறப்பாக ஆடி வெற்றி பெற வைத்தனர்.
We stand with #INDwithHasanAli#PAKVSAUS pic.twitter.com/U0r5oHWQRn
— Baap Bolte (@BaapBol214) November 11, 2021
இந்த ஆட்டத்தில் போட்டியின் முடிவை ஒரே பந்து மாற்றியது என்று கூறலாம். கடைசி 12 பந்துகளில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில் 19வது ஓவரின் 3வது பந்தை வீசிய சாகின் அப்ரிடி சிறப்பாக பந்து வீச அதனை எதிர்த்து விளையாடிய மேத்யூ வேட் கேட்ச் ஒன்றினை கொடுத்தார். ஆனால் அதனை ஹசன் அலி பிடிக்க தவறிவிட்டார். அந்த பந்தில் 2 ரன்கள் கிடைக்க அடுத்த மூன்று பந்துகளையும் வேட் சிக்சருக்கு விரட்டி ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
ஹசன் அலி அந்த கேட்சை மட்டும் பிடித்து இருந்தால் நிச்சயம் போட்டி பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்து இருக்கும். இதனால் கடுப்பான பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை சரமாரியாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய ரசிகர்கள் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள். இரு அணிகளும் நன்றாகவே விளையாடியது. வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துக்கள் என ட்விட்டரில் #INDwithHasanAli என்ற ஹேஸ்டேக்கில் தெரிவித்து வருகின்றனர்.