தென்னாப்பிரிக்காவிடம் கெத்து காடிய பும்ரா - வாழ்வா-சாவா? நிலையில் இந்தியா
இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதில் கேப்டன் விராட் கோலி 79 ரன்களும், புஜாரா 43 ரன்களும் குவிக்க முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த தென்னாப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கேப்டன் டீன் எல்கரின் விக்கெட்டை மட்டும் இழந்து 17 ரன்கள் எடுத்த நிலையில் இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
தொடந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியில் பீட்டர்சென் அதிகப்பட்சமாக 72 ரன்கள் எடுக்க ஏனைய வீரர்கள் பெரிய அளவில் ரன்களை சேர்க்கவில்லை. 76.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கியது.
இறுதியாக 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 14 ரன்களும், புஜாரா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நாளை நடக்கவுள்ள 3 ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அதிக ரன்கள் குவிக்கவில்லை எனில் தென்னாப்பிரிக்க அணியுடனான தொடரை இழக்க நேரிடும் என்பதால் இப்போட்டி குறித்த கவலை ரசிகர்களிடம் எழ தொடங்கியுள்ளது.