ஆல் எரியாலயும் அய்யா கில்லிடா…சதம் விளாசிய கே.எல்.ராகுல்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கே.எல் ராகுல் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுலும், மாயன்க் அகர்வாலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
முதல் ஓவரில் இருந்தே தென் ஆப்ரிக்கா அணியின் பந்துவீச்சை ஈசியாக எதிர்கொண்ட கே.எல் ராகுல் – மாயன்க் அகர்வால் கூட்டணி இலகுவாக ரன்னும் குவித்தது.
மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது பொறுமையை சோதித்த கே.எல் ராகுல் – மாயன்க் அகர்வால் கூட்டணியை போட்டியின் 41வது ஓவரில் நிகிடி பிரித்தார்.
மாயன்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்திருந்த போது நிகிடியின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களத்திற்கு வந்த சட்டீஸ்வர் புஜாரா முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதன்பின் வந்த கேப்டன் விராட் கோலி 94 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல் ராகுல் 218 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
கே.எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து ரஹானேவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் மூலம் போட்டியின் 82 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 253 ரன்கள் எடுத்துள்ளது.