வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி - என்ன செய்ய போகிறது இந்தியா?
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென்னாப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்த நிலையில் இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து பேட் செய்த இந்திய அணியில் புஜாரா 53 ரன்களும், ரஹானே 58 ரன்களும், ஹனுமன் விஹாரி 40 ரன்களும் எடுக்க 60.1 ஓவர்களில் அந்த அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா, நிகிடி, ஜான்சன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 240 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸை விளையாட தொடங்கிய அந்த அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டீன் எல்கர் 46 ரன்களுடனும், டேர்டூசன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்னும் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 2 நாள் ஆட்டம் மீதமிருக்க வெற்றிக்கு 122 ரன்களே தென்னாப்பிரிக்கா அணிக்கு தேவை என்பதால் அதன் வெற்றி உறுதியாகியுள்ளது. அதேசமயம் தனது மாயாஜால பந்துவீச்சால் இந்திய அணி ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.