தென்னாப்பிரிக்கா வீரருக்கு கொரோனாவா? - ரத்தாகிறதா இந்தியாவுடனான டெஸ்ட் தொடர்..!
தென்னாப்பிரிக்கா வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை உலக நாடுகள் உற்று கண்காணித்து வருகிறது. இந்த நேரத்தில் தான் இந்தியா டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென்னாப்பிரிக்காவுக்கு சென்றது.
மேலும் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் தொடரை ரத்து செய்துவிட்டு இந்திய அணி நாடு திரும்பும் என பிசிசிஐ கூறியிருந்தது. இதனிடையே தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் ஆலிவியர் திரும்பினார். அனுபவமும் திறமையும் வாய்ந்த இவர் முதல் டெஸ்ட்டில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக மார்கோ ஜென்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனால் அவர் ஏன் களமிறங்கவில்லை என்ற கேள்வி எழுந்தது.
அதேசமயம் ஆலிவியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய அணி, இது குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளித்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், ஆலிவியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உண்மை தான். ஆனால் அது இப்போது ஏற்படவில்லை. தொடர் தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்டு, குணமடைந்துவிட்டார். அது உறுதியான பிறகு தான் அவர் அணியில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும், உடல் அளவில் கொஞ்சம் சோர்வாக ஆலிவியர் இருந்ததால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பயோ பபுள் முறை தீவிரமாக கடைப்பிடித்து வருவதாகவும், வெளிநபர்கள் வீரர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது என்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.