என்னை வில்லனாக்கிட்டாங்க.. கம்பீருடன் மோதல் - லீ ஃபோர்டிஸ் வேதனை
கௌதம் கம்பீர் மற்றும் லீ ஃபோர்டிஸ் இடையேயான வாக்குவாதம் கவனம் பெற்றது.
கம்பீருடன் மோதல்
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியினர் ஓவல் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதார்ன்ஷு கோடக் ஆடுகளத்தை ஆய்வு செய்தனர். அவர்களைப் பார்த்த மைதான பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ், ஆடுகளத்தில் இருந்து 2.5 மீட்டர் தள்ளி நிற்குமாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து இந்திய அணியின் உதவியாளர் ஒருவர், குளிர்பானங்கள் வைத்திருந்த பெட்டியை மைதானத்தின் அருகே கொண்டு சென்றபோது, ஃபோர்டிஸ் அவரை திட்டினார். இதனைப் பார்த்த கம்பீர் ஃபோர்டிஸிடம் நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
லீ ஃபோர்டிஸ் கருத்து
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், "மைதான பராமரிப்பாளர் ஏன் அப்படிச் செய்தார் என்று தெரியவில்லை. இது ஒரு தேவையற்ற விஷயம். பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் ஆடுகளத்தை அருகில் சென்று பார்க்க உரிமை உண்டு.
இதற்கு முந்தைய நான்கு போட்டிகளில் இப்படி எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை" என்று கூறினார். இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து பேசிய லீ ஃபோர்டிஸ் "நான் ஒருபோதும் வில்லனாக இருந்ததில்லை, என்னை அப்படியாக உருவாக்கிவிட்டார்கள். நீங்கள் இந்த ஆட்டத்தை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.