கவலைப்படாதீங்க இன்னொரு நாள் நடக்கும் - பிசிசிஐ அறிக்கை

Cricket Test Match BCCI INDvsENG
By Thahir Sep 10, 2021 11:01 AM GMT
Report

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் ரத்தானதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து 5-வது டெஸ்டை வேறொரு தருணத்தில் நடத்த பிசிசிஐ விரும்புவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.

கவலைப்படாதீங்க இன்னொரு நாள் நடக்கும் - பிசிசிஐ அறிக்கை | Ind Vs Eng Cricket Test Match Bcci

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதனால் இந்திய அணியின் வியாழக்கிழமை பயிற்சி ரத்தானது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. எனினும் இன்று மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள்.

வரும் நாள்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகமானால் என்ன செய்வது என அவர்கள் அச்சப்பட்டார்கள். இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது பிசிசிஐ.

இதன் முடிவில் 5-வது டெஸ்ட் ரத்தானதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து டெஸ்ட் தொடரின் முடிவு குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

5-வது டெஸ்ட் ரத்தானதால் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றதா அல்லது டெஸ்டில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்ததால் 2-2 என டெஸ்ட் தொடர் சமனாகியுள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் 5-வது டெஸ்டை வேறொரு தருணத்தில் நடத்த விரும்புவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றின் இடையே வலுவான உறவு உள்ளது. அதன் அடிப்படையில் 5-வது டெஸ்டை வேறொரு தருணத்தில் நடத்த பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளது.

இரு கிரிக்கெட் வாரியங்களும் இதுகுறித்து திட்டமிட்டு ஒரு முடிவு எடுக்கப்படும். வீரர்களின் பாதுகாப்பில் பிசிசிஐ எப்போதும் அக்கறை செலுத்தும்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி. ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. அப்போது 5-வது டெஸ்டை நடத்த வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.