இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி இந்தியா - வலுவான நிலையில் இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது.
தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
சிறப்பாக விளையாடிய ரோரி ஜோசப், ஹசீப் ஹமீது, டேவிட் மாலன் ஆகியோர் அரைசதமும், கேப்டன் ஜோ ரூட் சதமும் விளாச 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக முகம்மது சமி 3 விக்கெட்டுகளும், சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி இந்தியாவை விட 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்னும் 3 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. குறிப்பாக சிறப்பான ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணியை இன்னிங்ஸ் தோல்வியடைய செய்ய இங்கிலாந்து திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.