இந்தியாவிற்கு சோதனை மேல் சோதனை : ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி மற்றொரு தோல்வியை சந்தித்துள்ளது. ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியது.
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஸஃபாலி வெர்மா தலா 10 மற்றும் 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய யாஷிகா பாட்டியா மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர்.
Australia become the first team to qualify for the semis after a six-wicket victory against India at Eden Park ?
— ICC (@ICC) March 19, 2022
More ? https://t.co/APj4B58SEA#CWC22 pic.twitter.com/16xdQkVD5C
யாஷிகா பாட்டியா 59 ரன்கள் (83 பந்துகள், 6 பவுண்டரி), மிதாலி ராஜ் 68 ரன்கள் (96 பந்துகள், 4 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ரச்சேல் ஹெய்ன்ஸ் மற்றும் அலிசா ஹீலி ஆகியோர் சிறப்பாக விளையாடி 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய அலிசா ஹீலி 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து ரசேல் ஹெய்ன்ஸ் 43 ரன்களில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 123 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. பின்னர் வந்த கேப்டன் மேக் லேன்னிங் மற்றும் எல்லிஸ் பெர்ரி நிலைத்து நின்று ஆடி 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர்.
அப்போது ஆஸ்திரேலிய அணி 41 ஓவரில் 225 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 9 ஓவரில் 53 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. பின்னர் மழை நின்றதால் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.
அப்போது சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த எல்லிஸ் பெர்ரி 28 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பெத் மூனி மெக் லேன்னிங் உடன் களம் கண்டார். இந்த ஜோடி போட்டியை கடைசி கட்டம் வரை எடுத்து சென்றது. ஆனால், 48வது ஓவரில் அந்த அணியின் கேப்டன் மெக் லேன்னிங் 97 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
இதனால் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டம் மிகுந்த பரபரப்பாக மாறியது. கடைசி ஓவரை இந்திய அனியின் கோஸ்வாமி வீசினார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ஸ்ட்ரைக்கில் நின்றார். அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது.
இதனால் மீதமிருக்கும் 5 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. கடைசி ஓவரில் இரண்டாவது பந்தில் 2 ரன்களும், அதற்கடுத்த பந்தில் பவுண்டரியும் எடுக்கப்பட்டது. இறுதியில் 49.3 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் பூஜா வஸ்திராகர் 2 விக்கெட்டுகளையும் சிநேஹ் ராணா, மேக்னா சிங் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.