இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் ரத்து? - அதிர வைக்கும் தகவல்
இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் 8 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகள் என பெரிய தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்த தொடருக்காக தான் இந்திய சீனியர் வீரர்களுக்கு தற்போது ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா தொற்று உருவாகியுள்ளதால் இந்த சுற்றுப்பயணம் ரத்தாகும் சூழல் உருவாக்கியுள்ளது. மேலும் இந்திய வீரர்கள் அங்கு செல்வது ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணி மொத்தம் 7 வாரங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்து விளையாடவுள்ளது. எனவே அதற்குள் இந்திய வீரர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிட்டால் சிரமமாகிவிடும் என பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க தென்னாப்பிரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய ஏ அணி வீரர்களையே திரும்பி நாட்டிற்கு அழைக்க பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகள் அதிகாரப்பூர்வமற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அவர்கள் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.