சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து இந்தியா விலகல்? - பாகிஸ்தான் தான் காரணம்
2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ள நிலையில் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது.
2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பினர். இதனால் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறாமல் இருந்தது.
இதனிடையே ஜிம்பாப்வே,மேற்கிந்தியத் தீவுகளை வரவழைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தியது.மேலும் ஐ.பி.எல் தொடரை பார்த்து காப்பி அடித்து தொடங்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டன.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தது.ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்ததை அடுத்து நியூசிலாந்து,இங்கிலாந்து ஆகிய நாடுகள் தொடரிலிருந்து வெளியேறியது.
மேலும் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கும் சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை போன்ற தொடரை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி முடிவு எடுத்துள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுமா என்று கேள்வி எழுந்தது.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், 'பாகிஸ்தானில் உள்ள நிலையை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டுமே இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல முடியும். அதனை மத்திய அரசு பிறகு அறிவிக்கும்' என்று கூறியுள்ளார்.
அதேசமயம் சாம்பியன்ஸ் கோப்பையை சிறப்பாக நடத்துவோம் என்று பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.