சூழலில் வீழ்ந்த இலங்கை...ஆசியக்கோப்பை இறுதியில் இந்தியா...!!
நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசியக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தியா vs இலங்கை
நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி ரோகித் ஷர்மாவும், சுப்மன் கில்லும் ஆடடத்தை துவங்கினர். 11 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் திரட்டி வலுவான அஸ்திவாரத்தை உருவாக்கிய நிலையில், 12-வது ஓவரில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவை சுப்மன் கில் (19 ரன்) போல்டாக்கினார்.
தொடர்ந்து தனது அடுத்தடுத்த ஓவர்களில் விராட் கோலி (3 ரன்), ரோகித் சர்மா (53 ரன், 48 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தி துனித் வெல்லாலகே மிரட்டினார். அதனை தொடர்ந்து சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ராகுல் (39 ரன், 44 பந்து, 2 பவுண்டரி) வெல்லாலகேவின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச்சாகி வெளியேறினார்.
இஷான் கிஷன் 33 ரன்னில் (61 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற இந்திய அணி பெரிய ஸ்கோரை அடிக்காமல் ஆட்டமிழந்தது. 49 ஓவர்களில் 213 ரன்களை மட்டுமே சேர்த்து இந்திய அணி ஆல் அவுட்டானது. இலங்கை அணியில் வெல்லாலகே 10 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 40 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
சூழலில் சிக்கிய இலங்கை
பின்னர், 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் நிசாங்கா (6 ரன்), குசல் மென்டிஸ் (15 ரன்) ஆகியோர் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு கருணாரத்னே (2 ரன்), சமரவிக்ரமா (12 ரன்), சாரித் அசலங்கா (22 ரன்), கேப்டன் ஷனகா (9 ரன்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 99 ரன்களை மட்டுமே எடுத்து தள்ளாடியது. சிறிது நேரம் தாக்குபிடித்தாடிய தனஞ்ஜெயா டி சில்வா (41 ரன், 66 பந்து, 5 பவுண்டரி) ஜடேஜா பந்துவீச்சில் கேட்ச் ஆனார். முடிவில் இலங்கை அணி 41.3 ஓவர்களில் 172 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெல்லாலகே 42 ரன்களுடன் (46 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர்4 சுற்றில் 2-வது வெற்றியை பதிவு செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததுள்ளது.