பாகிஸ்தானை விரட்டிய இந்தியா....228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.!!
நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
கோலி - கே.எல்.ராகுல் அபாரம்
கொழும்பு நகரில் உள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் ஞாயிறு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆட்டம் தொடங்கிய 24.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதன் காரணமாக காரணமாக ஆட்டம் தடைபட்டது. அப்போது கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும், விராட் கோலி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியானது நேற்று மீண்டும் துவங்கியது.
ராகுல் - கோலி இணையை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் கடைசி வரை முயற்சித்து ஏமாற்றமே அடைந்தனர். 100 பந்துகளில் 2 சிக்ஸர்ஸ், 10 ஃபோர்களை அடித்து கே.எல்.ராகுல் சதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் தனது பங்கிற்கு 2 சிக்ஸர்ஸ், 6 பவுண்டரிகளை அடித்து 83 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் அதிவேகமாக 13,000 (267 இன்னிங்ஸ்) ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. அதேபோல சர்வதேச ஒருநாள் போட்டியில் கோலியின் 47வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்களை குவித்தது. முடிவில் 106 பந்துகளில் 111 ரன்களுடன் கே.எல்.ராகுலும், 94 பந்துகளில் 122 ரன்களுடன் விராட் கோலியும் களத்தில் இருந்தனர். கோலி ராகுல் இணைந்து 253 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குல்தீப் யாதவ் அசத்தல்
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள், ஆரம்பம் முதலே அடித்து ஆட முற்பட்டு, தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மாமுல் ஹக் 9 ரன், பாபர் அசாம் 10 ரன், முகமது ரிஸ்வான் 2 ரன் எடுத்து அடுத்தடுத்த ஆட்டமிழக்க பின்னர் பந்துவீச துவங்கிய குல்தீப் யாதவ் மொத்தமாக பாகிஸ்தான் அணி வீரர்களை வெளியேற்றினர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 128 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
பாகிஸ்தான் அணியின் நசீம் ஷா, ஹாரிஸ் ஆகியோர் காயம் காரணமாக பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 32 ஓவரில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது. அபாரமாக பந்து வீசிய குல்திப் யாதவ் 8 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.