டி20 கோப்பை இந்தியாவுக்கு தான் போல.. பயிற்சி ஆட்டத்தில் ஆஸி., வீழ்த்தி அபார வெற்றி
டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று துபாய் ஐசிசி அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 57 ரன்களும், ஸ்டோய்னிஸ் 41 ரன்களும், மேக்ஸ்வெல் 37 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 60, கே.எல்.ராகுல் 39, சூர்யகுமார் யாதவ் 38 ரன்கள் விளாச 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.