சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம் - பல மணி நேரம் காத்திருப்பு

devotees sabarimala சபரிமலை ஐயப்பன் கோவில்
By Petchi Avudaiappan Dec 10, 2021 05:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16 ஆம் தேதி முதல் "வெர்ச்சுவல் க்யூ" முலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இதனிடையே பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் "வெர்ச்சுவல் க்யூ" மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ஆயிரமாக நேற்று வியாழக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு "ஸ்பாட் புக்கிங்" மையம் மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சபரிமலையின் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

18 ஆம் படியேறி நடை பந்தலில் குழுமியிருக்கும் பக்தர்கள் தொடர்ச்சியாக தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் நடை பந்தலிலே பலமணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தரிசனம் முடித்த பக்தர்கள் அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதம் வாங்குவதற்காக சன்னிதானத்தில் உள்ள பிரசாத மண்டபத்தில் கூடுவதால் அங்கேயும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்பட்டு மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்படும். 

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.