டெல்லியில் அதிகரித்த காற்று மாசு : மத்திய,மாநில அரசுகளுக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

delhiairpollution stategovernment
By Thahir Dec 02, 2021 11:47 AM GMT
Report

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்து உறுதியான செயல்திட்டத்தை 24 மணிநேரத்திற்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

வாகன பெருக்கம், அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.

காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில், காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 15-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்றும் உத்தரவிட்டப்பட்டது.

அதன் பின்னர், காற்றின் தரம் சற்று அதிகரித்ததையடுத்து கடந்த 29-ம் தேதி டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், தற்போது மீண்டும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

இதனால், டெல்லியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, காற்றின் தர மேலாண்மை ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் சரியாக அமல்படுத்தவில்லை என உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

மேலும், நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு அடுத்த 24 மணி நேரத்திற்குள் டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்து உறுதியான செயல்திட்டங்களை கொண்டுவர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.